கெய்ரோ, ஜூன் 25 - இஸ்ரேலியப் படைகள் நேற்று காஸாவில் குறைந்தது 40 பாலஸ்தீனர்களைக் கொன்று புதிய இடப் பெயர்வுகளுக்கு உத்தரவிட்டதாக உள்ளூர் மருத்துவர்களும் குடியிருப்பாளர்களும் தெரிவித்தனர்.
வான்வழிப் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேலும் ஈரானும் ஒப்புக்கொண்ட சிறிது நேரத்தில் காஸா இரத்தக்களரியாக மாறியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் காஸாவில் 20 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை பாலஸ்தீனர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
இந்த போர் காஸாவின் பெரும்பாலான பகுதிகளை அழித்து, குடியிருப்பாளர்களை இடம்பெயரச் செய்துள்ளது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடும் பரவலாக உள்ளது.
போதும்! முழு பிரபஞ்சமும் நம்மை ஏமாற்றிவிட்டது. ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹெஸ்புல்லா காஸா இல்லாமல் அமைதி ஒப்பந்தத்தை எட்டியது. இப்போது ஈரானும் அதையே செய்துள்ளது என்று காஸா நகரத்தைச் சேர்ந்த 62 வயதான அடெல் ஃபாரூக் கூறினார்.
காஸா அடுத்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் ராய்ட்டர்ஸிடம் ஓர் உரையாடல் செயலி மூலம் கூறினார்.
போரிடும் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறியதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். குறிப்பாக, இஸ்ரேல் மீதான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார். விரக்தியின் உச்சத்தில் ஆபாசமான வார்த்தையுடன் அவர் அதைக் கண்டித்தார்.
இதனிடையே, காஸாவில் மிகக் குறைந்த இடைவெளியில் கொடிய வன்முறை மீண்டும் தொடர்ந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் அருகிலுள்ள உதவி விநியோக மையத்தை அடைய முயன்ற கூட்டத்தினர் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் 146 பேர் காயமடைந்ததாகவும் மத்திய காசாவில் உள்ள நுசைராட்டில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையைச் சேர்ந்த மர்வான் அபு நாசர் கூறினார்.


