சபாக் பெர்ணம், ஜூன் 25 - வெள்ளப் பிரச்சனையை குறுகியக் காலத்தில் தீர்ப்பதற்கான மூன்று ஊராட்சி மற்றங்களை உள்ளடக்கியப் புதிய அணுகுமுறையை மாநில அரசு அமல்படுத்தும்.
மெகா வெள்ளத் தடுப்புத் திட்டம் முழுமையாக நிறைவடையும் வரை காத்திருக்கும் தருணத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை
தடுப்பதில் இந்த 'குயிக் வின்' முன்னெடுப்பு உதவும் என்று உள்கட்டமைப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.
அடுத்த மாதம் நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது உள்கட்டமைப்பு தொடர்பான, குறிப்பாக வெள்ளம் சம்பந்தப்பட்டக் கேள்விகள் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, வெள்ளத் தீர்வுகளுக்கான புதிய அணுகுமுறையை நாங்கள் அறிவிப்போம்.
குறிப்பாக, சுபாங் ஜெயா, கிள்ளான் மற்றும் ஷா ஆலம் ஆகிய மூன்று ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய 'குயிக் வின்' அதாவது விரைவு வெற்றி நடவடிக்கையை அறிமுகப்படுத்துவோம் என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள பெர்ணம் ஜெயா பகுதியில் விவசாயிகள் அமைப்பிற்கு விவசாய உபகரணங்கள் உதவி வழங்கும் விழா மற்றும் சிவில் வேளாண் விற்பனை திட்டத்தை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த 'விரைவு வெற்றி' முன்னெடுப்பானது எமது தரப்புக்கும் சம்பந்தப்பட்ட மூன்று ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் விரிவான முறையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாகும். இதற்கு லட்சக்கணக்கான வெள்ளிவரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இஷாம் மேலும் கூறினார்.
வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில், புதிய திட்டம் குறித்த விவரங்கள் சட்டமன்றத்தில் வெளியிடப்படும் எனக் கூறிய அவர், அடுத்த அக்டோபர் மாதத்திற்கு முன்பு இத்திட்டம் முடிக்கப்படும் என்றார்.


