கோலாலம்பூர், ஜூன் 25 — கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து 1,008.56 கி.மீ குழாய்களை மாற்றியுள்ளதாகப் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்தது. இது குழாய்கள் வெடிக்கும் அபாயத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு விநியோகத்தை தடை ஏற்படாமல் இருக்க துணப்புரியும் என ஆயர் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் சஃபியன் கசாலி தெரிவித்தார்.
2016 முதல் குழாய்களை மாற்று நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 300 கி.மீ குழாய்களை மாற்றும் நோக்கில் கடந்த ஆண்டு இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
“இது மிகவும் நம்பகமான நீர் விநியோகத்தை நோக்கிய அந்நிறுவனத்தின் முயற்சியாகும். பழைய குழாய்கள் மாற்றப்பட்ட பிறகு, வெடிப்பு குழாய் குறியீடு கடந்த ஆண்டு 100 கி.மீட்டருக்கு 3.25 சம்பவங்களாக குறைந்துள்ளது நிலையில் முந்தைய ஆண்டு, 100 கி.மீட்டருக்கு 4.18 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
எதிர்காலத்தில் வெடிப்பு குழாய்களின் சிக்கலைச் சமாளிக்க முயற்சிப்போம்,” என்று அவர் இன்று ஆயர். சிலாங்கூர் ஆண்டு நிலைத்தன்மை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு கூறினார்.
பிப்ரவரியில், ஆயர் சிலாங்கூர் ஆண்டுக்கு 150 கி.மீட்டரிலிருந்து 300 கி.மீட்டராக அதிக குழாய் மாற்று விகிதத்தை அறிவித்தது, மேலும் இந்த விகிதம் 2034 முதல் 400 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
பிப்ரவரி 1, 2024 அன்று அமலுக்கு வந்த புதிய நீர் கட்டணத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


