கோலாலம்பூர், ஜூன் 25 - மத்திய கிழக்கில் நிலவி வரும் நிலைமைகள் காரணமாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால், நேற்று அதிகாலை துபாய்க்குச் சென்ற பாதேக் ஏர் OD713 விமானம் திட்டமிடப்பட்ட பாதையில் செல்ல முடியாமல் KLIA அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திற்குத் மீண்டும் திரும்பியது.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புதான் பாதேக் ஏர் நிறுவனத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
KLIA அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் தங்குமிடம், உணவு மற்றும் தரைவழி போக்குவரத்து உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகள் முழு பணத்தைத் திரும்பப் பெற்று தங்கள் முன்பதிவை ரத்து செய்யலாம் அல்லது அடுத்த செல்லக்கூடிய விமானத்தில் மீண்டும் முன்பதிவு செய்யலாம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்துலக விமானப் பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதை கட்டுப்பாடுகளின் முழு இணக்கத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வர்த்தக விமான சேவைகளுக்காக கட்டார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு வான் வெளிப் பகுதிகளை மீண்டும் திறந்தால் துபாய்க்கான விமானச் சேவை இன்று மீண்டும் தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


