செலாயாங், ஜூன் 25 - கடந்த 2024-ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்று உள்நாட்டு பொது பல்கலைக்கழகங்களில் கல்வி துறையில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் 300 மாணவர்களுக்கு கல்வி அமைச்சு உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.
எஸ்.டி.பி.எம் முடித்த மாணவர்கள் கல்வி துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஊக்குவிக்கவும், பல்கலைக்கழக அளவில் அதை வலுப்படுத்தவும் அமைச்சு மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் அடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
"கல்வித் துறையில் தங்கள் படிப்பைத் தொடர, திறமையுள்ளவர்கள் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்." என்றார்.
கோலாலம்பூரில், எஸ்.டி.பி.எம் மற்றும் மலேசியப் பல்கலைக்கழக ஆங்கில மொழி தேர்வு, முவேட்டிற்கான சிறந்த மாணவர் விருது, 2024ஆம் ஆண்டுக்கான அந்நிய நாட்டவர்களுக்கான மலாய் மொழி ஆற்றல் சான்றிதழ், SKBMW ஆகியவற்றை வழங்கிய நிகழ்ச்சியில் ஃபட்லினா இவ்வாறு உரையாற்றினார்.
உண்மையிலேயே அர்ப்பணிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் மட்டுமே கல்வித் துறையின் முதுகெலும்பாக மாறுவதை உறுதி செய்வதன் மூலம், நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த உபகாரச் சம்பளம் வழங்கும் நடவடிக்கை அமைவதாக அவர் கூறினார்.
பெர்னாமா


