கோலாலம்பூர், ஜூன் 25 - டாருல் ஏஹ்சான் இலவச குடிநீர் திட்டத்திற்கான விண்ணப்ப காலம் இந்த ஆண்டு இறுதி வரை திறந்திருக்கும் நிலையில் அத்திட்டத்தின் வழி பயன்பெற விரைந்து பதிவு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதில் பிரச்சனைகள் எதிர்நோக்குவோர் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஆடாம் சுஃபியான் கஸாலி கூறினார்.
இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் ஆயர் சிலாங்கூர் (அலுவலகம்) அல்லது காட்சிக்கூடத்திற்கு வரலாம். அல்லது 15300 என்ற எண்களில் அழைக்கலாம் என அவர் சொன்னார்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பதைப் சரிபார்ப்பதில் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். இதுவரை, 340,000 பயனீட்டாளர்கள் இந்த இலவச நீர் திட்டத்தில் சலுகைகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் நேற்றிரவு மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
முன்னதாக 2024 நிலைத்தன்மை அறிக்கையை சமர்ப்பிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஆடாம், இந்தத் திட்டத்திற்கான பதிவு 13 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு 39,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த 2024 டிசம்பர் வரை இந்த திட்டத்தில் 324,000 கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 500,000 பயனீட்டாளர்களைப் பதிவு செய்யும் இலக்கை அடைவோம் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலவச குடிநீர்த் திட்டத்தின் வழி இலக்கிடப்பட்டத் தரப்பினருக்கு 20 கன மீட்டர் நீர் இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://www.airselangor.com/services/sade?lang=ms என்ற இணையத்தளத்தை நாடவும்.


