கோலாலம்பூர், ஜூன் 25 - அம்பாங், தாமான் மெலாவதியில் உள்ள ஒரு பேரங்காடியில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் அந்நிய நாட்டு தொழிலாளி ஒருவரிடமிருந்து 20.85 கிலோகிராம் மெத்தம்பெத்தமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 80,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் கூறினார்.
ஐம்பது வயதுடைய அந்த நபர் பிற்பகல் 12.35 மணியளவில் அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அந்த நபரின் பையில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் அடங்கிய 20 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபடிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அந்த நபர் இந்த நாட்டில் சுமார் 10 வருடங்களாக வசித்து வருவது சோதனையில் தெரியவந்தது. சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தம்பெத்தமைன் மற்றும் ஆம்பெத்தமைன் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும் அவருக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 20,850 போதைப் பித்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
இக்கைது தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை வரை காவலில் வைக்கப்பட்டார்.


