இஸ்தான்புல், ஜூன் 25 - இம்மாதம் 13ஆம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 606 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 5,332 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் சிறார்களும் அடங்குவர் என அமைச்சு உறுதிப்படுத்தியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இது குறித்த கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை.
கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரானில் உள்ள பல தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. அவற்றில் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களும் அடங்கும்.
தெஹ்ரான் அணுகுண்டை தயாரிக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஆனால், இந்தக் கூற்றை ஈரான் கடுமையாக மறுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி எதிர் தாக்குதலைத் தொடங்கியது. அதே நேரத்தில் அமெரிக்காவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியது.
மத்திய கிழக்கில் உள்ள அந்த இரண்டு பரம எதிரிகளுக்கும் இடையே நடைபெற்ற 12 நாள் வான்வழிப் போருக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று அறிவித்தார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது, இதன் வழி "12 நாள் போர்" முடிவுக்கு வந்தது.
எனினும், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், செவ்வாய்க்கிழமை அதிகாலை தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்த தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
அதேசமயம், ஈரான் குற்றச்சாட்டுகளை அந்த மறுத்ததோடு எந்தவொரு புதிய தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கப்போவதாக சபதம் செய்தது.
அதே தினம், இஸ்ரேல் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.


