சிப்பாங், ஜூன் 24 - கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல பயணச் சேவைகளை மலேசிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும்போது இப்பகுதியின் மீது பறக்கும் விமானங்களின் பாதுகாப்பு குறித்த கவலையைத் தொடர்ந்து விமானிகளுக்கான அறிவிப்பு (நோட்டம்) வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஒரு போர் மோதல் இருந்த காரணத்தால் நோட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, விமானப் பயணத்திற்கு ஆபத்து இருந்தது என்பது உண்மைதான்.
அந்த வான்வெளி மூடப்பட்டிருப்பதால் எந்த விமான நிறுவனமும் அதன் வழியாக பறக்க முடியாது என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த நிலவரத்தைத் தொடர்ந்து விமானப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து விமான நிறுவனங்களும் மாற்று நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக லோக் கூறினார்.


