கோலாலாம்பூர், ஜூன் 24 - PTKL2040 எனப்படும் 2040 கோலாலம்பூர் உள்ளூர் திட்டத்திற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறு, மேல்நிலை வர்கத்தினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தத் திட்டம் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஏற்கனவே வசதியாகவும் ஆடம்பரத்திலும் வாழ்ந்து வருபவர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முறை தொந்தரவுக்கு உள்ளாவதை விரும்பவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்நிலையில், இத்திட்டத்தை இறுதிச் செய்யும்போது, அனைவரையும் அது மகிழ்விக்காது என்பது தவிர்க்க முடியாதது ஒன்று என்றார். மக்கள் வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கும்போது, அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொள்கிறது,
ஆனால் மடாணி மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்துவதில் அரசாங்கத்துக்கு அனுபவம் இருப்பதால், அரசின் பரந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு மேல்நிலை மக்கள் அவர்களின் ஆதரவை வழங்க வேண்டும் என PTKL2040 திட்ட அறிமுக விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் கேட்டு கொண்டார்.
அத்திட்டம் சிறு வியாபாரிகள் போன்ற செல்வாக்கு இல்லாதவர்களின் நலன்களையும் புறக்கணிக்காது என அவர் உத்தரவாதம் அளித்தார்.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக முன்னர் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இது இந்நகரத்தில் வாழும் மக்களுக்கு, குறிப்பாக B40 மற்றும் M40 குழுக்களில் உள்ள பெரும்பான்மையான குடியிருப்பாளர்களுக்கு வீடமைப்பு திட்டத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்று அன்வார் கூறினார்.


