(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 24 - கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான
அடைவு நிலையைப் பதிவு செய்த பண்டார் செந்தோசாவைச் சேர்ந்த
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வை செந்தோசா, ராஜ ராஜேஸ்வரி
ஆலயம் அண்மையில் வெகு சிறப்பாக நடத்தியது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் ராஜா மஹாடி, அண்டலாஸ், மற்றும்
கம்போங் ஜாவா இடைநிலைப்பள்ளிகளில் பயின்ற 28 மாணவர்கள்
வெகுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
எஸ்.பி.எம். தேர்வில் 5 ஏ முதல் 11 ஏ வரை பெற்ற 28 மாணவர்கள் இந்த
வருடாந்திர நிகழ்வில் ரொக்கப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டதாக
ஆலயத்தின் தலைவர் எஸ். சந்திரசேகரன் கூறினார்.
நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்வினை கிள்ளான் ரோட்டரி
கிளப், கிள்ளான் சமூக நலச் சங்கம், ஜான்நார் அமைப்பு, ஸ்ரீ முருகன்
விற்பனை நிலையம் ஆகிய தரப்பினரின் ஆதரவுடன் ஆலய நிர்வாகம்
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது என அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் 5ஏ முதல் 7ஏ வரை பெற்ற மாணவர்களுக்கு தலா 400
வெள்ளியும் 7ஏ முதல் 9ஏ வரை பெற்ற மாணவர்களுக்கு தலா 500
வெள்ளியும் 10 மற்றும் 11ஏ பெற்ற மாணவர்களுக்கு தலா 700 வெள்ளியும்
வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வை நடத்துவதற்கு தங்களுக்கு 12,000 வெள்ளி செலவு
பிடித்ததாகக் கூறிய அவர், ஆலயத்தை வெறும் வழிபாட்டுத் தளமாக
மட்டுமின்றி மக்களுக்கான சேவை மையமாகவும் விளங்கச் செய்யும் நோக்கில் இத்தகைய நிகழ்வுகளைத் தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு
வருவதாகச் சொன்னார்.
சிறந்த எஸ்.பி.எம். மாணவர்களுக்கு வெகுமதி வழங்குவது தவிர்த்து
கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நாங்கள்
தொடர்ந்து அமல்படுத்தி வருகிறோம் என அவர் கூறினார்.


