கோலாலம்பூர், ஜூன் 24 - மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎம்) மற்றும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்) ஆகியவற்றின் இணைப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என ஏர் ஆசியா கருதுகிறது.
பாதுகாப்பு, வான்வெளி மேலாண்மை, பயனீட்டாளர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒழுங்குமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுங்குமுறை மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் திறமையான கட்டமைப்பை நிறுவுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த அணுகுமுறை அமைந்துள்ளதோடு தொழில்துறை பங்கேற்பாளர்களுக்கு தெளிவையும் ஏற்படுத்துகிறது. மேலும், போட்டித்தன்மை வாய்ந்த விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதற்கான மலேசியாவின் லட்சியங்களை ஆதரவாகவும் இருக்கிறது என அது குறிப்பிட்டது.
ஒரே விமான ஒழுங்குமுறை அமைப்பு முக்கிய ஒழுங்கு முறை செயல்பாடுகளை ஒரே சுயேச்சை சட்டப்பூர்வ அமைப்பின் கீழ் கொண்டு வருகிறது என்று ஏர் ஏசியா ஏவியேஷன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கம் கூறினார்.
இது செயல்முறைகளை ஒருமுகப்படுத்தி தொழில்துறையினருக்கு தெளிவான பங்கேற்பை வழங்கும். விமான சூழலியல் அமைப்பு முறையில் செயல்திறனை அதிகரிக்கும். மேலும், இறுதியில் மேம்பட்ட இணைப்பு மற்றும் சேவை மூலம் பயணிகள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியா மலேசியா நிறுவனம் தினமும் சுமார் 500 பயணச் சேவைகளை கொள்கிறது. இதன்வழி நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 75,000 பயணிகள் பயன்பெறுகின்றனர். ஆகவே, செயல்திறன் மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.


