கோலாலம்பூர், ஜூன் 24 - பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவின் (அர்மாடா)
நிதியை நம்பிக்கை மோசடி செய்ததில் உடந்தையாக இருந்தது,
சொத்துகளை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் சட்டவிரோதப் பணப்
பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட
தண்டனையை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக்
அப்துல் ரஹ்மான் (வயது 32) செய்து கொண்ட மேல் முறையீடு மீது
நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ அகமது ஜைடி
இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ நோர்டின்
படாருடின் ஆகியோர் நாளை காலை 9.00 மணிக்கு இத்தீர்ப்பை
வழங்கவுள்ளனர்.
இந்த வழக்கில் சைட் சாடிக் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் டத்தோ முகமது யூசுப் ஜைனால் அபிடின் மற்றும் டத்தோ ஹிஷ்யாம் தோ போ தெய்க்கும் அரசுத் தரப்பில் ஆஜரான டத்தோ வான் ஷாஹாருடின் வான் லாடின் மற்றும் ஃபாரா எஸ்லின் யூசுப் கானும் தங்களின் வாதத் தொகுப்பை
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி சமர்ப்பித்தனர்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனக்கு விதித்த ஏழாண்டுச் சிறை,
இரண்டு பிரம்படிகள் மற்றும் 1 கோடி வெள்ளி அபாரதத்தை எதிர்த்து சைட்
சாடிக் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மேல் முறையீடு
செய்திருந்தார்.
நம்பிக்கை மோசடி செய்ததில் உடந்தையாக இருந்தது, சொத்துகளை
தவறாகப் பயன்படுத்தியது மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை
ஆகிய குற்றச்சாட்டுகளில் சைட் சாடிக் குற்றவாளியே என உயர்
நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


