செர்டாங், ஜூன் 24 - அனைத்துலக 11-வது யோகா தினத்திற்காக, மலேசியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் சக்தி யோகா பள்ளி, சிலாங்கூர் செர்டாங் மயிப்சில் அதன் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து மகத்தான வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
5,368 பேருடன் மிக அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட யோகா அமர்வு என்ற வரலாற்றை உருவாக்கிய சக்தி யோகா பள்ளி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து. மேலும், இளையோரிடையே யோகா கலையை வேரூன்றவும் செய்திருக்கின்றது.
மலேசியா முழுவதும் உள்ள யோகா ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதாக சக்தி யோகா பள்ளியின் தோற்றுநரும் யோகா பயிற்றுநருமான எஸ்.கே. துரை தெரிவித்தார்.
பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 130 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தக் கொண்டாட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.
சிறியோர் முதல் முதியோர் வரை பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி திறமையை வெளிப்படுத்தியதோடு மனவலிமையையும் பெற்றனர்.
யோகா என்பது கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயிற்சியாக அறியப்படும் நிலையில் அதில் ஆர்வம் கொண்டுள்ள கர்ப்பிணி பெண்களும் இதில் பங்கேற்றது அந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமாக அமைந்தது.
உடல் பயிற்சியாக மட்டுமல்லாத யோகக் கலை, சமூகம், தலைமுறை உட்பட கலாச்சாரங்களை இணைக்கும் பாலம் என்பதை இந்நிகழ்ச்சி மெய்ப்பித்திருப்பதாக துரை குறிப்பிட்டார்.


