ஷா ஆலம், ஜூன் 24 - சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 24வது நோய்த் தொற்று வாரத்தில் (ஜூன் 9–15) மட்டும் 1,082 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முந்தைய வாரம் பதிவான 795 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இது 36 விழுக்காட்டு அதிகரித்துள்ளதை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை வழங்கிய தரவுகள் காட்டுகின்றன. இம்மாநிலத்தில் தொடர்ந்து 10வது வாரமாக தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும், கடந்த 2022 முதல் 2024 வரையிலான சிலாங்கூரில் தொற்று நோய்களின் போக்கை அடிப்படையாகக் கொண்ட 5,670 என்ற எச்சரிக்கை வரம்பிற்குக் கீழே இந்த எண்ணிக்கை உள்ளது என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
எந்தவொரு இடையீட்டு நடவடிக்கைகளும் தொடங்கப்படுவதாக இருந்தால் கோவிட்-19 எண்ணிக்கை 10,386 ஐ எட்ட வேண்டும். இவ்வாண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 7,582 ஆகும். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவான 18,231 சம்பவங்களை விட மிகக் குறைவு என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகள் பதிவான மாவட்டமாகப் பெட்டாலிங் உள்ளது (2,475). அதனைத் தொடர்ந்து உலு லங்காட் (1,435), கிள்ளான் (974), கோம்பாக் (927) மற்றும் சிப்பாங் (615) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
வட மாவட்டங்களான சபாக் பெர்ணம் (137) மற்றும் உலு சிலாங்கூர் (148) ஆகியவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.
இவ்வாண்டில் 31 முதல் 59 வயதுடைய பெரியவர்கள் (44 விழுக்காடு) அதிக அளவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 18 முதல் 39 வயதுடைய இளைஞர்கள் (27 சதவீதம்) மற்றும் 1 முதல் 6 வயதுடைய சிறார்கள் (9 சதவீதம்) அப்பட்டிலில் உள்ளனர் என்று ஜமாலியா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்வாண்டு மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் 7,582 பேர் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 353 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஜமாலியா கூறினார்.


