வாஷிங்டன், ஜூன் 24 - ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர்நிறுத்தம் அமல் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் இன்று அதிகாலை தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல்தான் ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதே தவிர, ஈரான் அல்ல என்பதை அந்நாடு ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது.
போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக இன்று வரை எந்த ஒப்பந்தமும்' ஏற்படவில்லை என்று அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறினார்.
மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் "முழுமையான மற்றும் விரிவான" போர்நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேலும் ஈரானும் உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இருப்பினும், தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4.00 மணிக்குள் ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேலிய அரசு நிறுத்தினால் அதற்குப் பின்னர் எதிர் தாக்குதலைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நாங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று அரக்சி கூறினார்.
ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்காக இஸ்ரேலை தண்டிக்கும் ஈரானின் இராணுவ நடவடிக்கை கடைசி தருணம் வரை அதாவது உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணி வரை தொடர்ந்ததாக அவர் சொன்னார்.
கடைசி சொட்டு இரத்தம் வரை நமது அன்புக்குரிய தாயகத்தைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் நமது துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கு அனைத்து ஈரானிய மக்களுடனும் இணைந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிரியின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் கடைசி தருணம் வரை அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.


