மாஸ்கோ, ஜூன் 24 - ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்தும் "நியாயமற்ற" தாக்குதல்கள் உலகை பெரும் ஆபத்தை நோக்கி கொண்டுச் செல்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சாடினார்.
அந்த இஸ்லாமிய குடியரசின் மக்களுக்கு உதவ முயற்சிப்பதாக வாக்குறுதியளித்த புடின், எனினும், அந்த உதவி தொடர்பான எந்த குறிப்பிட்ட தகவலையும் அவர் வழங்கவில்லை.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது குறித்தும் ஆட்சி மாற்றம் குறித்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இஸ்ரேலும் பகிரங்கமாகக் கோடிகாட்டியுள்ளன. இந்த நடவடிக்கைகள் முழு பிராந்தியத்தையும் பெரிய போரின் படுகுழியில் தள்ளக்கூடும் என்று ரஷ்யா அஞ்சுகிறது.
கிரெம்ளினில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் மற்றும் ரஷ்யாவின் ஜி.ஆர்.யு. இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவர் இகோர் கோஸ்ட்யுகோவ் ஆகியோருடன் சந்தித்தார்.
ஈரானுக்கு எதிரான முற்றிலும் சினமூட்டப்படாத ஆக்கிரமிப்புக்கு எந்த அடிப்படையும் நியாயமும் இல்லை என்று புடின் அராக்சியிடம் கூறினார்.
நெருக்கடியை அமைதிப்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேச விரும்புகிறோம். எங்கள் பங்கிற்கு, ஈரானிய மக்களுக்கு உதவ நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து கூடுதல் உதவி கோரி கமேனி எழுதிய கடிதத்தை அரக்சி புடினுக்கு வழங்கவிருந்தார் என்று மூத்த வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. எனினும், மாஸ்கோ தரப்பிலிருந்து அது உறுதிப்படுத்தப்படவில்லை.
பின்னர், உயர் இராணுவ ஆட்சேர்ப்பு வீரர்களுடனான சந்திப்பில் பேசிய புடின், மத்திய கிழக்கில் மோதல் அதிகரிப்பதையும் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் ஈடுபாட்டையும் குறிப்பிட்டார். இருப்பினும் அவர் அமெரிக்காவை பெயரைக் குறிப்பிடவில்லை.
வெளி பிராந்திய சக்திகளும் மோதலில் இழுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உலகை மிகவும் ஆபத்தான கோட்டிற்கு கொண்டு வருகின்றன என அவர் எச்சரித்தார்.
ஈரானை ஈர்க்கும் வகையில் ரஷ்யாவின் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை என்று ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக புடின் இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என்று அந்த நாடு விரும்புகிறது. இருப்பினும், தெஹ்ரான் என்ன மாதிரி உதவியை விரும்புகிறது என்பதை அந்த வட்டாரங்கள் விரிவாகக் கூறவில்லை.


