இஸ்தான்புல், ஜூன் 24 - மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கத்தார் நேற்றிரவு தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியதாக அந்த வளைகுடா நாட்டின் வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டிற்கு வரும் பொதுமக்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.
தனது பிரதேசத்தில் உள்ள அனைத்து தனிநபர்களின் பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கும் வகையில் நாட்டின் வான்வெளியில் விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பிராந்திய நிலைமையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் பரந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு அமைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
கத்தார் அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து வருவதோடு பிராந்திய மற்றும் அனைத்துலக சகாகளுடன் ஆகக்கடைசி மேம்பாடுகளை மதிப்பிடுகின்றனர்".
எந்தவொரு சமீபத்திய தகவலும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
கத்தாரில் உள்ள அனைத்து தனிநபர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் தொடர்ந்து முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா
குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தை அடைந்தது.


