ஷா ஆலம், ஜூன் 23: இந்த ஆண்டு இறுதிக்குள் 200,000 தனிநபர்களை திவால்நிலையிலிருந்து விடுவிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதுவரை சுமார் 186,000 நபர்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையட் கூறினார்.
பாதிக்கப்பட்ட குழுக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர இரண்டாவது வாய்ப்பை வழங்குவதில் பல்வேறு அரசாங்க முயற்சிகளைச் செயல்படுத்தியதன் விளைவாக மலேசிய திவால்நிலைத் துறையின் பதிவுகள் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டதாக அவர் கூறினார்.
"இந்த ஆண்டு இறுதிக்குள், திவால்நிலையிலிருந்து வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட மொத்த தனிநபர்களின் எண்ணிக்கை 200,000 பேரை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, கடந்த ஆண்டு முதல் RM200,000க்கு மேல் கடன் இல்லாத 40 வயது மற்றும் அதற்கு கீழ்யுள்ள இளைஞர்களுக்கு இரண்டாவது வாய்ப்புக் கொள்கை விரிவுபடுத்தப்படும் என கூறினார்.
2021 முதல் மே 2025 வரை 25 முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட 25,578 திவால்நிலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 10,145 திவால்நிலை வழக்குகள் 35 முதல் 44 வயதுடைய நபர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அசாலினா கூறினார்.
பாலினத்தின் அடிப்படையில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவு திவால் நிலையை சந்திப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா


