ஜோர்ஜ்டவுன், ஜூன் 23 - ரஹ்மா அடிப்படை உதவித் தொகை (சாரா) திட்டத்திற்கு தகுதி பெற்ற 54 லட்சம் பேரில் சுமார் 48 லட்சம் பேர் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட வளாகங்களில் அடிப்படை பொருள்களை வாங்கியுள்ளனர்.
இத்திட்டம் மூன்று மாதங்களில் பயன்பாட்டு விகிதம் 89 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த சாதனை இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வெற்றி பெற்றதை நிரூபித்துள்ளதாக துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.
பல்வேறு தகவல் மற்றும் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளதை அந்த எண்ணிக்கை காட்டுவதாக அவர் கூறினார்.
பெர்லிஸ் மாநிலத்தில் 94 விழுக்காட்டு மக்களும், சபாவிலும் கெடாவிலும் 93 விழுக்காட்டு மக்களும், பினாங்கில் 88 விழுக்காட்டு மக்களும் 'சாரா' திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பினாங்கு ஜார்ஜ்டவுனில் உள்ள ஒரு பேரங்காடியில் 'சாரா' திட்டத்தின் அமலாக்கத்தை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாடு முழுவதும் உள்ள 3,700 சில்லறை விற்பனை கடைகள் 'சாரா' திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
--பெர்னாமா


