கோலாலம்பூர், ஜூன் 23 - இந்திய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுப்படுத்தும் நோக்கில் சமூக தொடர்பு துறை J-KOM-மின் கீழ் (நண்பா) எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கக் கொள்கைகள், அதன் முயற்சிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள பல்வேறு தகவல்களையும் வாய்ப்புகளையும் இந்திய சமுதாயம், குறிப்பாக இளையோர் சமூகம் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள இத்திட்டம் வடிவமைக்கப்பப்பட்டுள்ளது.
இத்திட்டம் மலேசிய மடாணி குறித்தத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
சுய வளர்ச்சி, மென் திறன்கள், இணைய பாதுகாப்பு மற்றும் அரசாங்கக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது போன்றவற்றில் இந்திய சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
இதன் அறிமுக நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் ஜூன் 28-ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூர் லெம்பா பந்தாய், IWK Eco Park தளத்தில் நடைபெறவிருக்கிறது.
காலை மணி 8 தொடங்கி மாலை மணி 4 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை, தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
இதில் விளக்க கூட்டங்களுடன், பிள்ளைகளுக்கு வண்ணம் தீட்டுதல், பெரியோருக்கு புதையல் தேடுதல், அதிர்ஷ்ட குலுக்கல், ரஹ்மா மடாணி விற்பனை என்று பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்று பயன்பெற இந்திய சமூகத்தினரும் அரசு மற்றும் தனியார் துறைகளும் அழைக்கப்படுகின்றனர்.
-- பெர்னாமா


