NATIONAL

மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதி- சவால்களைக் கடந்து சாதனைகள் படைக்கும்

23 ஜூன் 2025, 5:18 PM
மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதி- சவால்களைக் கடந்து சாதனைகள் படைக்கும்

(ஆர்.ராஜா)

நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆன போதிலும் ஏழ்மையிலிருந்தும்

சமூக சிக்கல்களிலிருந்தும் மீள முடியாத நிலையில் இந்திய சமூகம் இருந்து

வருகிறது. சமூக மாற்றத்திற்காக நிறைய உருமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், அதில் எஞ்சி நிற்பது என்னவோ வெறும் ஏமாற்றமாகத்தான் உள்ளது. கால காலமாக நிராகரிப்புடன் வாழ்க்கையை நகர்த்தி வந்த இந்திய சமூகத்திற்கு 2008ஆம் ஆண்டு தேர்தலில் பக்கத்தான் ராக்யாட் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, சமூகத்தின் நாளைய நம்பிக்கைக்கு நீர் வார்த்தது.

அந்த ஆட்சி மாற்றத்தின் பலனாக ஷா ஆலம், செக்சன் 7இல் உள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு மாநாட்டு மையத்துடன் கூடிய அழகிய தமிழ்ப்பள்ளி கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியது. அதோடு மட்டுமல்ல, வசதி குறைந்த மாணவர்கள் தங்கி படிப்பதற்குரிய வசதிகளுடன் தங்கும் விடுதியும் உருவாக்கப்பட்டது.

மாணவர் தங்கும் விடுதியைக் கொண்ட நாட்டின் ஒரே தமிழ்ப்பள்ளி மிட்லெட்ண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநில அரசின் 40 லட்சம் வெள்ளி மானியத்தில் உருவாக்கப்பட்ட இந்த தங்கும் விடுதி 200 மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த தங்கும் விடுதி தொடங்கப்பட்டதன் நோக்கம், திட்டங்கள் மற்றும் அது

எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்து விவரிக்கிறார் மிட்லண்ட்ஸ்

தமிழ்ப்பள்ளியின் வாரியத் தலைவர் கே. உதயசூரியன்.

வறுமை மற்றும் வசதி குறைவு காரணமாக தங்கள் பிள்ளைகளை

பள்ளிக்கு அனுப்ப இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு

உதவும் நோக்கிலும் அம்மாணவர்களுக்கும் உரிய கல்வி வாய்ப்பு

வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த தங்கும் விடுதியை

நாங்கள் தொடங்கினோம்.

இந்த மாணவர்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு மற்றும் இதர

அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தந்து மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் தங்கள் கல்வியைத் தொடரும் அதே வேளையில் விளையாட்டு மற்றும் இதர இணைப்பாட நடவடிக்கைளிலும்

பங்கேற்று தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு

வழங்க வேண்டும் என்பதே எங்களின் தலையாய நோக்கமாகும் என அவர்

குறிப்பிட்டார்.

சகல வசதிகளுடன் 400 முதல் 500 மாணவர்கள் பயிலக்கூடிய மிட்லெண்ட்ஸ்

தமிழ்ப்பள்ளியில் இப்போது 165 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இங்கு மாணவர் விடுதியை நிர்மாணிப்பதன் மூலம் பள்ளியில் மாணவர்

எண்ணிக்கையை உயர்த்த முடியும் எனவும் நாங்கள் நம்பினோம்.

மேலும், இங்கு தங்கியிருக்கும் மாணவர்களை நன்கு பக்குவப்படுத்தி

இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் போது அவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் தங்களை புதிய சூழலுக்கு பக்குவப்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும் கிட்டும்.

இந்த நோக்கங்களின் அடிப்படையில் தொடக்க கட்டமாக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டில் பயிலக்கூடிய 26 மாணவர்களுடன் இந்த தங்கும் விடுதி செயல்படத் தொடங்கியது. மிகுந்த

எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த விடுதி தனது இலக்குகளை அடைவதில் பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும்  எண்ணற்ற இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறது.

இந்த தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் ஒவ்வொரு மாணவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் ஒன்றுக்கு 1,000 வெள்ளி வரை தேவைப்படுகிறது. அவர்களுக்கு மூன்று வேளை உணவு, வார்டன் சம்பளம், மருத்துவம் உள்ளிட்ட செலவுகளும் இதில் அடங்கும்.

ஆனால், வாக்குறுதியளித்தபடி எங்களுக்கு நிதியுதவி கிட்டவில்லை. இதனால் பள்ளியிலிருந்து கிடைக்கும் நிதி வளங்களைப் பயன்படுத்தி இந்த விடுதியை நிர்வகித்து வருகிறோம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் அபரிமித முன்னேற்றம் காணப்படுகிறது. அவர்கள் முழு நேரமாகப் பள்ளியில் உள்ளதால் யோகா, கால்பந்து பயிற்சி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே, இந்த பள்ளியில் மாணவர் தங்கும் விடுதி செயல்படுவதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் தர மறுத்துள்ளது. பள்ளியின் நேரடிப் பார்வையில் மாணவர் தங்கும் விடுதி இருக்கும் பட்சத்தில் அங்கு ஏற்படும அசம்பாவிதங்களுக்கு கல்வி இலாகாவும் பள்ளி நிர்வாகமும் அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ற கல்வியமைச்சு கவலை கொண்டுள்ளது.

இதுபோன்ற நிர்வாக சிக்கல்கள் எழும் என்று தொடக்கத்தில் நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும், கல்வியமைச்சின்ன கவலை நியாயமானது என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம். ஆகவே. இதற்கு மாற்று வழியாக அந்த தங்கும் விடுதியை பள்ளியிலிருந்து பிரித்தெடுத்து அதனை சமூக நல இலாகாவிடம் பதிவு செய்யும் பட்சத்தில் இந்த

விடுதியை தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்று அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. விடுதியை பள்ளியிலிருந்து தனியாக பிரிக்கும் பணிக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது.

இதன் தொடர்பில் மாநில அரசிடம் நிதி கோரி நாங்கள் விண்ணப்ப்பித்துள்ளோம். மாநில அரசு நிதி வழங்குவதன் மூலமாக அல்லது தாங்களை முன்வந்து அந்த விடுதியை பள்ளியிலிருந்து பிரித்து சமூக நல இலாகாவின் பொறுப்பில் ஒப்படைக்கும் பட்சத்தில் இந்த விடுதியை நாங்கள் சமூக நல இலாகாவின் உதவியுடன் தொடர்ந்து நடத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும்.

மேலும், சமூக நல இலாகா, கல்வியமைச்சு மற்றும் மாநில அமைச்சின் உதவியையும் பெற இயலும். கல்வியமைச்சின் உத்தரவு காரணமாக மாணவர்களை சேர்க்க இயலாத நிலையில் இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 11 பேராகக் குறைந்து விட்டது. அடுத்தாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று எங்களுக்கும் தெரியவில்லை.

இவ்விரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இங்கு தங்க வைத்து அவர்களுக்கு கல்வி கொடுத்து, விளையாட்டுகளிலும் இதர இணைப்பாட நடவடிக்கைகளிலும் ஆற்றலை வளர்த்து சமூகத்தில் பயன்மிக்க பிரஜைகளாக ஆக்க வேண்டும் என்ற எங்களின் கனவு கைக்கூடாமல் போய்விடுமோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் எதிர்நோக்கும் சவால்களை அறிந்து 2026ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியத்தில் 50,000 வெள்ளியை இந்த மாணவர் தங்கும் விடுதிக்கும் மேலும் 50,000 வெள்ளியை பள்ளிக்கும் வழங்க முன்வந்த மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவுக்கு பள்ளி வாரியத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று உதயசூரியன் கூறினார்.

மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மற்றும் மாணவர் தங்கும் விடுதி ஆகியவை

முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின்

இலட்சியத் திட்டம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமுதாய நலனையும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த தங்கும் விடுதி திட்டத்தை அவர் அமல்படுத்தினார். இந்த திட்டம் ஒருபோதும் அஸ்தமனம் ஆகி விடக்கூடாது என்பதே நமது எதிர்பார்ப்பு.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.