கோத்த கினபாலு, ஜூன் 23 - தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மிகவும் சிறப்பான சட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்காகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய மின் வணிகச் சட்டத்தின் மறுஆய்வு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி கூறினார்.
பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் தொடர்புடைய சட்டங்களை வரைவதற்காக அல்லது திருத்துவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு மதிப்பாய்வு நடவடிக்கை இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட முக்கிய சட்டங்களில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1999 மற்றும் மின்னணு வர்த்தகச் சட்டம் 2006 ஆகியவை அடங்கும்.
"புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதா அல்லது தற்போதைய சட்டங்களை மிகவும் உகந்ததாகவும், விரிவானதாகவும், தற்போதைய சவால்களுக்கு பொருத்தமானதாகவும் மாற்ற அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவது உட்பட, இந்த ஆண்டு இறுதிக்குள் மதிப்பாய்வை இறுதி செய்வதே எங்கள் நோக்கம்," என்று அவர் மலேசியா சபா பல்கலைக்கழகத்தில் சபா-நிலை 2025 வணிக டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மதிப்பாய்வு, தற்போதுள்ள சட்டங்களில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிதல், ஒழுங்குமுறை நோக்கத்தை மதிப்பிடுதல் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு எதிராக மலேசியாவின் மின் வணிகச் சட்டங்களை அளவுகோல் மூலம் மதிப்பிடுதல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஆர்மிசான் மேலும் கூறினார்.
தொழில் மற்றும் நுகர்வோர் இருவரின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளையும் கருத்தில் கொண்டு, மலேசியாவின் மின் வணிகத்ட்ஜிற்கு மிகவும் பயனுள்ள ஒழுங்குமுறை அணுகுமுறையுடன் புதிய சட்டம் அல்லது திருத்தங்கள் முன்மொழியப்படும். என்றார்.
— பெர்னாமா


