செர்டாங், ஜூன் 23 - மொத்தம் 399,787 வெள்ளி சம்பந்தப்பட்ட அந்நிய
நாணய முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
கும்பலைச் சேர்ந்த பத்து உள்நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூச்சோங், பண்டார் புத்ரியில் உள்ள மையம் ஒன்றில் நடத்தப்பட்ட
சோதனையில் 21 முதல் 38 வயது வரையிலான ஏழு ஆடவர்களும்
மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது ஃபாரிட் அகமது கூறினார்.
இவர்கள் அனைவரும் நிர்வாகி, இணையத்தள வடிவமைப்பாளர்,
வாடிக்கையாளர் சேவை வழங்குநர், நிறுவன ஆவணங்களை கையாளும்
நிர்வாகத் தரப்பினர் ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்ததாக அவர்
சொன்னார்.
கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வந்த இக்கும்பல் உள்நாட்டினர்
மற்றும் வெளிநாட்டிரை இலக்காக கொண்டு மோசடி நடவடிக்கையில்
ஈடுபட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார். தங்களின் செயலி வாயிலாக முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காக இக்கும்பல் தொடக்கத்தில் கவர்ச்சிகமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வந்துள்ளது என அவர் சொன்னார்.
இக்கும்பல் இரு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. எனினும், அவை
மலேசிய நிறுவன ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. மோசடி
நோக்கத்திற்காக சொந்தமாக செயலியை இக்கும்பல் உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக
நம்பப்படும் மற்றொரு நிறுவனம் குறித்தும் நாங்கள் விசாரித்து
வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
அந்த செயலியில் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும்
5,597 பேரின் பெயர்ப்பட்டியல் இருந்தது. அவர்களில் 2,482 பேர் மலேசியர்களாவர். இவர்கள் தவிர்த்து 111 இந்தோனேசியர்களும் தலா ஓர்
இந்தியர், மங்கோலியர், தென்னாப்பிரிக்கரும் இதில் இடம் பெற்றுள்ளனர்
என்றார் அவர்.


