பெய்ஜிங், ஜூன் 23 - கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்தை (இ.சி.ஆர்.எல்.)
சேவையைத் தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் தாமதம்
ஏற்படக் காரணமாக விளங்கும் என நம்பப்படும் கேபிள் திருட்டு
சம்பவங்கள் குறித்து மலேசியன் ரயில் லிங்க் சென். பெர்ஹாட்
(எம்.ஆர்.எல்.) நிறுவனம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைக்
கடந்து செல்லும் இந்த இ.சி.ஆர்.எல். இரயில் தடத்தின் குறிப்பிட்ட சில
பகுதிகளில் கேபிள் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வதாக எம்.ஆர்.எல்.
தலைமை செயல்துறை அதிகாரி டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக்
கூறினார்.
இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் மறுசீரமைப்புக்கான செலவினத்தை
அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம்
சோதனை ஓட்டத்தை தொடங்குவதற்கான திட்டத்தையும் தாமதப்படுத்தும்
என்று அவர் சொன்னார்.
இ.சி.ஆர். திட்டத்தின் பிரதான குத்தகையாளரான சீனாவின்
கம்யூனிகேஷன்ஸ் கன்ட்ஸ்ராக்சன் கம்பெனி நிறுவனத்தின்
தலைமையகத்திற்கு மலேசிய ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்டுள்ள
வருகையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த இரயில் பயணச் சேவையை 2027ஆம் ஆண்டு தொடங்கத்
திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இரயில் தடத்தை ஒப்படைப்பதில் தாமதம்
ஏற்படும் பட்சத்தில் தங்களுக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இழப்பு
ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த கேபிள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் எம்.ஆர்.எல். நிறுவனம்
போலீசில் புகார் செய்துள்ளதோடு கட்டுமானப் பகுதியில் உள்ள
பொருள்களை பாதுகாக்க பாதுகாவலர் நிறுவனத்தின் சேவையையும்
பெற்றுள்ளது என்று டார்விஸ் சொன்னார்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொருட்டு உள்துறை அமைச்சர்
மற்றும் தேசிய போலீஸ் படைத் தலைவருடன் சந்திப்பு நடத்தவும்
தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


