கோலாலம்பூர், ஜூன் 23 - இன்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத் தோற்றுநர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார். இந்திய சமுதாயத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்த பாடுபட்ட அன்னாரின் மறைவு இந்திய சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள அவரது வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டது. அவரின் மறைவை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குர் சுரேன் கந்தா உறுதிப்படுத்தினார்.
70-ம் ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. அந்த பின்னடைவை நிவார்த்தி செய்ய டான் ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா மலாயா பல்கலைக்கழகத்தின் சகா விரிவுரையாளர்களின் ஒத்துழைப்புடன் பெட்டாலிங் ஜெயா பி். பி. என் விடுதியில் ஆறாம் படிவ மாணவர்களுக்கான இலவச பிரத்தியோக வகுப்புகள் தொடங்கினார். இது இந்திய மாணவர்கள் தங்களின் தகுதிகளை வளர்த்து கொண்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்களின் மேற்கல்வியை தொடர மிகவும் உறுதுணையாக இருந்தது.
80 ம் ஆண்டுகளில் ஒரு துடிப்புமிக்க சமுதாய வாதியாக விளங்கிய டாக்டர் எம். தம்பிராஜா இந்திய சமுதாய கல்வியில் மட்டுமின்றி பொருளாதார மற்றும் அரசியலிலும் தனி சித்தாந்தங்களையும் கொண்டிருந்ததை அவருடன் நெருங்கி பழகிய பலர் அறிவர்.
பின்னர், 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலாயா பல்கலைக்கழகத்தில், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை அவர் தொடங்கினார். அன்று நான்கு நிலையங்களில் தொடங்கிய ஸ்ரீ முருகனின் கல்விப் பயணம் இன்று நாடு தழுவிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவாக்கம் கண்டுள்ளது
மேலும், கல்வியோடு, சமயத்தையும் ஆன்மீகத்தையும் சேர்த்து போதிக்க தொடங்கிய இந்தக் கல்வி நிலையம் நாடு தழுவிய அளவில் மாணவர்களின் வளர்ச்சிக்கு எழுச்சிக்கும் பெரும் பங்காற்றி உள்ளதை யாரும் மறுக்க இயலாது.
42 ஆண்டு காலமாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வழி, இந்திய சமுதாயத்தில் சுமார் 30 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கி மிகப் பெரிய கல்விப் புரட்சிக்கு வித்திட்ட டான்ஸ்ரீ தம்பிராஜாவின் மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.
அவரின் உடலுக்கு நாளை ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் மணி 2 வரை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஆசிரமத்தில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தலாம்.
அதன் பின்னர் அவரின் இறுதிச் சடங்குகள் நாளை பிற்பகல் மணி 3 அளவில் செத்தியா ஆலம் நிர்வாணா மையத்தில் நடைபெறும் என்று சுரேன் கந்தா கூறினார்.
அவரை பிரிந்து துயரும் அன்னாரின் குடும்ப உறவுகளுக்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் குடும்பத்தினருக்கும் மீடியா சிலாங்கூர் அதன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


