வாஷிங்டன், ஜூன் 23 - முக்கிய கப்பல் போக்குவரத்து தடமான ஹார்மோஸ் நீரிணையை மூடும் ஈரானின் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கடுமையாக எச்சரித்துள்ளார்.
அனைத்துலக நிலையில் எண்ணெய் ஏற்றுமதியை சீர்குலைக்கும் வகையிலான இந்த முடிவுக்கு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக
ஜெர்மன் செய்தி நிறுவனமான டிபிஏ தெரிவித்துள்ளது.
அவர்கள் அவ்வாறு செய்தால் அது மற்றொரு பயங்கரமான தவறாக இருக்கும் என்று ரூபியோ நேற்று கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் பெரிய பங்கேற்பை குறிக்கும் வகையில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்திய 24 மணி நேரத்திற்குள் ரூபியோவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான சுமார் 55 கிலோமீட்டர் அகலமுள்ள முக்கிய கப்பல் பாதையை மூடுவது தெஹ்ரான் புரியும் "பொருளாதார தற்கொலைக்கு" சமமான செயலாகும் என்று ரூபியோ அமெரிக்க ஒளிபரப்பாளரான ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
இது நம்மைவிட மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை விட மிக மோசமாக பாதிக்கும் என்று அந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.
இது ஒரு பெரிய அளவிலான போராட்டமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு நாங்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஆதரவளித்ததாக நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இருப்பினும், இதன் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியிடம் உள்ளது.


