சிப்பாங், ஜூன் 23 - கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும்
ஈரானிலிருந்து 17 மலேசியர்கள் உள்பட 24 பேர் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டு நேற்றிரவு தாயகம் திரும்பினர்.
அந்த பயணிகளை ஏற்றிய மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்781 விமானம்
நேற்றிரவு 11.03 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையத்தின் முதலாவது முனையத்தை வந்தடைந்தது.
அவர்களை வெளியுறவு அமைச்சின் இரு வழி உறவுகள் பிரிவு துணைத்
தலைமைச் செயலாளர் டத்தோ அகமது ரோஸியான் அப்துல் கனி
வரவேற்றார்.
நாடு திரும்பியவர்களில் 17 மலேசியர்கள், அவர்களின் பராமரிப்பில் உள்ள
ஆறு ஈரானியர்கள் ஒரு சிங்கை பிரஜையும் அடங்குவர்.
தாங்கள் தெஹ்ரானிலிருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவைக்
தரை மார்க்காக கடந்து வந்ததாக இந்த குழுவுக்கு தலைமை தாங்கிய
ஈரானுக்கான மலேசிய அரச தந்திரி கைரி ஓமார் கூறினார்.
மேற்கிலிருந்து வரும் தாக்குதலின் மையத்திலிருந்து விலகி கிழக்கு
திசையில் நீண்ட பயணத்தை தேர்ந்தெடுக்க நாங்கள் முடிவெடுத்தோம்.
எல்லையைக் கடக்க மலேசியர்களை அனுமதிப்பதில் துர்க்மேனிஸ்தான்
அரசு நல்ல ஒத்துழைப்பை நல்கியது என்றார் அவர்.
மேலும், 12 மலேசியர்கள் இன்னும் ஈரானில் இருப்பதாக கூறிய அவர்,
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக
விஸ்மா புத்ரா நிலைமைய அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது
என்றார்.


