கோலாலம்பூர், ஜூன் 23 - கிள்ளான், பூலாவ் இண்டாவில் செயல்பட்டு வந்த
சட்டவிரோத மின் கழிவு தொழிற்சாலை மற்றும் கிள்ளான்
பள்ளத்தாக்கிலுள்ள சொகுசு குடியிருப்பு பகுதிகளில் குடிநழைவுத் துறை
கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 48 சட்ட
விரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
காலை 11.00 மணி தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில்
குடிநுழைவுத் துறை அமலாக்க அதிகாரிகளும் தேசிய பதிவு இலாகா
அதிகாரிகளும் இடம் பெற்றிருந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை
இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் கூறினார்.
பொது மக்கள் கொடுத்த புகார் மற்றும் இரு வார காலமாக நடத்தப்பட்ட
உளவு நடவடிக்கையின் வாயிலாக கிள்ளானில் உள்ள சட்டவிரோத மின்
கழிவு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 39 அந்நியத்
தொழிலாளர்கள் மற்றும் மூன்று உள்நாட்டினர் உள்பட 42 பேர் கைது
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அந்நியத் தொழிலாளர்களில் 25 முதல் 49 வயது
வரையிலான 12 சீன நாட்டுப் பெண்களும் 27 வங்காளதேச ஆடவர்களும்
அடங்குவர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
1963ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 39(பி) விதிமுறைகளின் கீழ்
புரியப்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் அனைவரும் தடுத்து
வைக்கப்பட்டனர் என்றார் அவர்.
இதனிடையே, இணைய மோசடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு
வந்ததாக நம்பப்படும் காஜாங் மற்றும் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர
குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் ஒன்பது வெளிநாட்டினர்
தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.
சீனப் பிரஜைகளான நான்கு ஆடவர்கள், மூன்று பெண்கள், ஒரு சிறுமி
மற்றும் ஒரு தைவான் ஆடவர் ஆகியோர் இந்த சோதனையில்
பிடிபட்டனர் என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக மலாக்கா,
மாச்சாப் வோம்போ குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் மையத்திற்கு
கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.


