சிரம்பான், ஜூன் 23 - கை கலப்பின் போது பாராங் கத்தியால் வெட்டப்பட்ட பாதுகாவலர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பண்டார் பாரு நீலாயில் உள்ள துரித உணவகம் ஒன்றின் எதிரே நேற்று நிகழ்ந்தது.
விடியற்காலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை அடையாளம் தெரியாத நபர்கள் கட்டையாலும் தாக்கி காயப்படுத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அப்துல் மாலிக் ஹஷிம் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு குண்டர் கும்பல் தொடர்பு அல்லது பழிவாங்கும் செயல் காரணமாக அமையவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மாறாக ஒன்றாக சேர்ந்த மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உண்டான கைகலப்பே இம்மோதலுக்கு காரணம் என அவர் சொன்னார்.
இந்த தாக்குதலில் தலை மற்றும் காலில் காயங்களுக்குள்ளான அந்த ஆடவரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஆடவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டது தொடர்பில் செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை அதிகாரியிடமிருந்து தாங்கள் அதிகாலை 6.08 மணிக்கு புகாரைப் பெற்றதாக மாலிக் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்த இடம் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 148, குற்றவியல் விதி 326 மற்றும் 427 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


