சபாக் பெர்ணம், ஜூன் 23 - மாநிலத்தின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் என்பதால் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள் (3ஆர்) தொடர்பான பிரச்சனைகளில் சிலாங்கூர் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது.
இன மற்றும் சமய உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உறுதியாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாளப்பட வேண்டும் என்று கிராமப்புற மேம்பாடு மற்றும் ஒற்றுமைத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும் பல இன சமூகங்கள் வாழக்கூடிய முக்கிய தேசிய மையமாகவும் சிலாங்கூர் இருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர், நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இன வேறுபாடு இருந்தபோதிலும் வலுவான ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு தேசத்தை நம்மால் உருவாக்க முடிந்தது.
அதனால்தான் நாங்கள் ஒற்றுமை அமைச்சுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்று அவர் சொன்னார்.
கடந்த 2023 முதல் இவ்வாண்டு மே வரை போலி செய்திகளை தாங்கிய 40,515 உள்ளடக்கங்கள் அடையாளம் காணப்பட்டு தள சேவை வழங்குநர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் தரவை மேற்கோள் காட்டி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
அந்த புகார்கள் மொத்தம் 11,819 3ஆர் உள்ளடக்கத்துடன் தொடர்புடையவை. அவற்றில் 7,571 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன.
தேசபக்தி மற்றும் இன ஒற்றுமையை வளர்ப்பதற்கு குறிப்பாக கிராமப்புறங்களில் ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளின் பங்கை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று ரிசாம் கூறினார்.
இதற்கிடையில், உள்ளூர் நிலையில் தீர்க்கக்கூடிய சமூகம் தொடர்பான சிறிய விஷயங்களைத் தவிர 3ஆர் பிரச்சனைகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வப் புகார்களும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


