கூச்சிங், ஜூன் 23 - ஈரான்-இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா போன்ற பெரிய சக்திகளின் தலையீடு நிலைமையை மோசமாக்கும் என்பதோடு பிராந்திய நிலைத்தன்மையையும் உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.
இந்த மோதலில் அமெரிக்காவின் தலையீடு பதற்றத்தை அதிகரித்து ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய உலகளாவிய வர்த்தக தடங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அமெரிக்கா உட்பட வெளி சக்திகளின் தலையீட்டால் நிலைமை இன்னும் நிலையற்றதாக மாறும். ஹார்முஸ் நீரிணை தடைசெய்யப்பட்டால் அது உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற சரவாக் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்துடனான சந்திப்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
வன்முறையை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துவதிலும் இஸ்ரேலின் சினமூட்டும் நடவடிக்கைகள் மற்றும் மிருகத்தனத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோருவதிலும் மலேசியா தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
உண்மையான அமைதியை அடைய வேண்டுமானால் மற்ற நாடுகளுக்கு எதிரான சினமூட்டும் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம்.
மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி குறித்து குரல் கொடுப்பதில் இறையாண்மை கொண்ட நாடுகள் ஒருபோதும் அமைதி காக்கக்கூடாது. இதில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகள் உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் குரல் எழுப்பும் திறனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.


