ஷா ஆலம், ஜூன் 21 - செரெண்டா உயர் மதிப்பு தொழில்துறை நகரத்தில் 26 கோடி வெள்ளி மதிப்புள்ள புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் வழி 2,000 குடியிருப்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் லைனர்ஜி பவர் சென். பெர்ஹாட் மூலம் பேட்டரி தயாரிப்பு ஆலையை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளடங்கும். இது நகராண்மைக் கழகத்தின் 14 பிளாக் ஷிப் முன்னெடுப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த முறையின் கீழ் வழங்கப்படும் சலுகைகளில் கூட்டத்திற்குப் பிறகு உடனடியாக ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியாகும்.
மேலும் மேம்பாட்டாளர்கள் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இது தவிர, நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் (சிசிசி) அங்கீகரிக்கப்பட்டவுடன் முழு உரிமத்தையும் உடனடியாக வழங்க முடியும் என்று நகராண்மைக் கழகம் நேற்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
நேற்று நடைபெற்ற ஊராட்சி மைய மேம்பாட்டுத் திட்டமிடல் குழு (ஒஎஸ்சி) கூட்டத்திற்குப் பிறகு நகராண்மைக் கழகத் தலைவர் ஜூலைஹா ஜமாலுடின் லைனெர்ஜி பவரின் முதலீட்டு இயக்குநர் லு ஜானிடம் ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.
உலு சிலாங்கூருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் வழியாக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் தனது உறுதிப்பாட்டை நகராண்மைக் கழகம் வெளிப்படுத்தியது.
இதன் வழி மாவட்டத்தில் முதலீடு அதிகரிக்கும் என்பதோடு சொத்து மதிப்பும் உயரும். மேலும் உள்ளூர் சமூகத்திற்கு அதிக வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.


