கப்பளா பாத்தாஸ், ஜூன் 21- இங்குள்ள பெனாகாவில் நேற்று மாலை 12 வயது மாற்றுத் திறனாளி சிறுமியுடன் காரை கடத்திச் சென்ற முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மாலை சுமார் 5.30 மணியளவில் சிறுமியின் தாய் இயந்திரம் இயங்கிய நிலையில் தனது மகளை காரில் விட்டு வகணவரின் பட்டறைக்கு இயந்திர எண்ணெயை வழங்கச்
சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்.
காருக்குத் திரும்பிய 40 வயதுடய அந்தப் பெண்மணி வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போனார். பின்னர் அந்த மாது தன் மகள் வசமிருந்த தனது கைப்பேசியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க Life360 இருப்பிட கண்காணிப்பு செயலியைப் பயன்படுத்தினார்.
அந்த செயலியின் வழி பட்டர்வொர்த், பாகான் லாலாங் பகுதியில் காரின் இருப்பிடத்தைக் அவர் கண்டறிந்தார் என்று அனுவார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஆடவர் ஒருவரைக் கைது செய்து பாதிக்கப்பட்ட சிறுமியையும் வாகனத்தையும் மீட்டனர் என்று அவர் கூறினார்.
60 வயதுடைய அந்த நபருக்கு ஏழு முந்தைய குற்றப் பதிவுகளும் 11 போதைப்பொருள் வழக்குகளும் இருப்பது ஒரு சோதனையில் கண்டறியப்பட்டதாக அனுவார் குறிப்பிட்டார்.
சிறுமி நல்ல நிலையில் உள்ளார். எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் பரிசோதனைக்காக கப்பளா பாத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379ஏ மற்றும் 363 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஹஸ்லிண்டா ரஹ்மத்தை 04-5762222 (இணைப்பு 2275) என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.


