ஜோர்ஜ் டவுன், ஜூன் 21- இணைய முதலீட்டு கும்பலின் வலையில் சிக்கிய பணி ஓய்வு பெற்ற முதியவர் 733,000 வெள்ளியை இழந்தார்.
66 வயதான அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு பெண்ணிடமிருந்து வந்த முதலீடு தொடர்பான குறுஞ்செய்தி இந்த மோசடிக்கு மூலகாரணமாக விளங்கியதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.
20 நிமிடங்களுக்குள் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு மூலதனத்திற்கும் 10 முதல் 15 விழுக்காடு லாபம் ஈட்ட முடியும் என அந்த முதியவரிடம்
வாக்குறுதி அளிக்கப்பட்டது.
முதலீட்டைத் தொடங்க செயலி மூலம் உறுப்பினராகப் பதிவு செய்யுமாறு பாதிக்கப்பட்ட நபரை சந்தேகப் பேர்வழி அறிவுறுத்தினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சலுகையால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்டவர் கடந்த மார்ச் 7 முதல் ஏப்ரல் 24 வரை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 25 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகள் மூலம் பணத்தைச் செலுத்தியதாக கூறிய அவர், லாபத்தைத் திரும்பப் பெற கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டதால் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்ததாக சொன்னார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கடந்த புதன்கிழமை தென்மேற்கு மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார். மோசடி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஹம்சா கூறினார்.


