ஜெனீவா, ஜூன் 21- காஸா இப்போது "மனிதர்களால் உருவாக்கப்பட்ட வறட்சியின்" விளிம்பில் உள்ளது. அங்கு தாகத்தால் இறக்கும் அபாயத்தில் சிறார்கள் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) வெள்ளிக்கிழமை கூறியது,
முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தின் குடிநீர் உற்பத்தி வசதிகளில் 40 விழுக்காடு மட்டுமே இன்னும் செயல்பட்டு வருவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
காஸா மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் அவசரகால தரநிலைகளுக்கு வெகு தொலைவில் நாங்கள் உள்ளோம் என்று யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
தற்போதைய மனிதாபிமான உதவிக்கான தடைகள் நீக்கப்படாவிட்டால் இளம் பிராயத்தினர் தாகத்தால் இறக்கும் நிலை தொடங்கும்.
மிருகத்தனம் நிறைந்தது என வகைப்படுத்தப்பட்ட ஒரு போரில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காஸா, இப்போது மிகவும் பயங்கரமான மரணத்தின் விளிம்பில் உள்ளது என்று சொன்னார்.
காஸாவில் உள்ள 217 குடிநீர் உற்பத்தி மையங்களில் தற்போது 87 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
காஸா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சி எனக் கருதக்கூடிய ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீர் விநியோக அமைப்பு பெருமளவில் முடங்கிப் போயுள்ளது என்று ஜேம்ஸ் எல்டர் கூறினார்.
இருப்பினும், இது மனிதனால் உருவாக்கப்பட்டதால், இதைத் தடுக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினைகள் எதுவும் தளவாட அல்லது தொழில்நுட்ப ரீதியானவை அல்ல. மாறாக, அவை அரசியல் ரீதியான பிரச்சினைகள். அரசியல் விருப்பம் இருந்தால், இந்த நீர் நெருக்கடியை ஒரே இரவில் தீர்க்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்


