ஷா ஆலம், ஜூன் 21- கோத்தா கெமுனிங் தொகுதியின் பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு டேவான் ஆஸ்டரில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாமான் புக்கிட் கெமுனிங், தாமான் கிரீன்வில்லே மற்றும் புக்கிட் கெமுனிங்கைச் சுற்றியுள்ள லோட் நிலகுடியிருப்புகளும் அடங்கும் என்று கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பிரகாஷ் கூறினார்.
அதிகாலை முதல் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் இடுப்பு அளவுக்கு உயர்ந்தது. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ள நிலையில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது என அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக நலத்துறை உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறது, மேலும் இந்த வெள்ளம் முதல் நிலை பேரிடராக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
தாழ்வான நிலப்பகுதி மற்றும் ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கெசாஸ்) நீர் நிரம்பி வழிவது ஆகியவை இப்பகுதியில் அடிக்கடி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாக விளங்கியதாக அவர் விளக்கினார்.
இதன் அடிப்படையில், ஏற்கனவே விவாதிக்கப்பட்ட வெள்ளத் தணிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளை அவர் வலியுறுத்தினார்.
இங்கு வெள்ளம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. எனவே வெள்ளத் தடுப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக, அதிகாலை 4.00 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் ஜாலான் கெபுன் மற்றும் கோத்தா கெமுனிங் உள்பட ஷா ஆலம் மற்றும் கிள்ளானின் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.


