ஷா ஆலம், ஜூன் 21- கிள்ளான், மேருவில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடைக்கு எதிரே துப்பாக்கியால் சுடப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் தனது வாகனத்தில் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாலை 3.37 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 46 வயது உள்ளூர் நபர் தனதுக் நான்கு சக்கர இயக்க வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் சாய்ந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
சூடுபட்ட நபர் இறந்துவிட்டதை மருத்துவ ஊழியர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விஜயாராவ் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அல்லது விசாரணை அதிகாரி ஏஎஸ்பி எம். சத்தியசீலனை 012-5197913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட வாகனத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதாக நம்பப்படும் துளைகள் ஓட்டுநரின் பக்கவாட்டு கண்ணாடியில் இருப்பதைக் காட்டியது.


