புத்ராஜெயா, ஜூன் 20 - அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து அரசு துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை உள்ளூர் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், உள்ளூர் விவசாயிகள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகளை இந்நடவடிக்கை வழங்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய அரசாங்கங்களின் அழைப்பின் பேரில் சென்ற போது இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்களை நான் ஒருபோதும் அதிகாரப்பூர்வ விழாவில் சாப்பிட்டதில்லை. எனவே, அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் உள்ளூர் பொருட்களின் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக தான் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் வேண்டாம் என்று அனைத்து அரசாங்கத் துறைகளுக்கும் கட்டளை வழங்கியுள்ளோம்", என்றார் அவர்.
உத்தரவுகள் வெளியிடப்பட்ட போதிலும், சில தரப்பினர் இறக்குமதி செய்யப்பட்ட உணவைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையையும் அவர் விமர்சித்தார்.
உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிப்பதில் அனைத்து துறைகளும் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா


