புத்ராஜெயா, ஜூன் 20 - மக்களின் வருமானம் இன்னும் குறைவாக இருப்பதாலும், வரி முறையை செயல்படுத்துவதற்கு ஏற்ற அளவு வருமானம் இல்லாததாலும், அரசாங்கம் ஜிஎஸ்டி வரியை மீண்டும் அமல்படுத்த இயலாது.
ஜிஎஸ்டி வெளிப்படையான வரி முறையாக இருந்தாலும், குறைந்த வருமானம் கொண்ட குழு அதிக சுமையை சுமப்பதை தவிர்க்க தற்போதைய அரசாங்கம் ஜிஎஸ்டியை செயல்படுத்தாமல் இருக்க முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"இன்னும் பலர் RM1,700 (குறைந்தபட்ச ஊதியம்) அல்லது RM2,000 சம்பாதிக்கிறார்கள். எனவே, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தாமல் இருப்பது குறைந்த வருமானம் பெறும் தரப்பினுருக்கான முடிவு ஆகும்," என்று அவர் நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் பேசும்போது கூறினார்.
மக்களின் சராசரி குறைந்தபட்ச வருமானம் மாதத்திற்கு 4,000 ரிங்கிட்டை எட்டினால் மட்டுமே ஜி.எஸ்.டி முறையை செயல்படுத்த முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.
ஜூலை முதலாம் தேதி நடைமுறைக்கு வரவிருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி (SST) குறித்து விளக்கிய பிரதமர், அது ஆக்கப்பூர்வமாகவும் இலக்கிடப்பட்டும் செயல்படுத்தப்படும் என்று விவரித்தார்.


