சிப்பாங், ஜூன் 20 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இஸ்ஸா அன்வாரை குறிவைத்து அநாகரீகமான மற்றும் வரம்புமீறிய ஆபாசமான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டதாக முக்குளிப்பாளரும் தனித்து வாழும் தந்தையுமான ஆடவருக்கு எதிராக இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளை ருஸ்லான் மாட் அலி (வயது 48) என்ற அந்த ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜனவரி 21 முதல் பிப்ரவரி 25 வரையிலான காலக்கட்டத்தில் ருஸ்லான் மாட் அலி என்ற தனது முகநூல் கணக்கில் பிறரை நோகடிக்கும் குரோத எண்ணத்துடன் அநாகரீகமான மற்றும் வரம்புமீறி ஆபாசமான கருத்துக்களை தெரிந்தே வெளியிட்டதோடு அவற்றைப் பகிர்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(ஏ) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15,000 ஜாமீனில் விடுவிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி.) துணை அரசு வழக்கறிஞர் ஃபாட்லி அப்துல் வஹாப் முன்மொழிந்தார்.
இருப்பினும், வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் தமக்கு நிலையான வருமானம் இல்லாததையும் மூன்று பிள்ளைகளை ஆதரிக்கும் பொறுப்பையும் காரணம் காட்டி குறைந்த ஜாமீன் தொகைக்கு மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி ஃபுவாட் ஜாமீன் தொகையை10,000 வெள்ளியாக நிர்ணயித்து வழக்கு விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் தொகையை செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து அடுத்த வழக்கு விசாரணை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


