ஜோகூர் பாரு, ஜூன் 20 - மாநகரின் பல பகுதிகளில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஆறு நபர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 12.8 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்களைக் கைப்பற்றினர்.
இந்த கைது நடவடிக்கையின் மூலம் உடனடி பானப் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தும் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்நடவடிக்கையில் முப்பது முதல் 39 வயதுக்குட்பட்ட ஒரு சிங்கப்பூர் ஆடவர், ஒரு தாய்லாந்து பெண் மற்றும் நான்கு உள்ளூர் நபர்கள் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 31 வயது உள்ளூர் நபர் கும்பலின் மூளையாக செயல்பட்டவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிரமாக செயல்பட்டு வந்த இந்த கும்பல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை போதைப்பொருட்களை பொட்டலமிட்டு சேமித்து வைப்பதற்கான இடமாகப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த கும்பல் உள்ளூர் சந்தையையும் குறிவைத்து 150 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை விலையில் போதைப் பொருள் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 7,669.5 கிராம் எக்ஸ்டசி பவுடர், 13.6 கிராம் கெட்டமைன் மற்றும் எட்டு கிராம் எரிமின் 5 மாத்திரைகளும் அடங்கும் என அவர் கூறினார்.
மேலும், அக்கும்பலிடமிருந்து லெக்ஸஸ் ஆர்சி200டி எஃப் ஸ்போர்ட் மற்றும் பெரோடுவா அல்சா ஆகிய இரண்டு கார்கள் 3,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 8,365 வெள்ளி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து சந்தேக நபர்களுக்கும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பது சிறுநீர் பரிசோதனையில்
உறுதி செய்யப்பட்டதாகவும் இரண்டு உள்ளூர் சந்தேக நபர்கள் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பதிவுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.


