கோலாலம்பூர், ஜூன் 20 - சுகாதாரக் காப்பீட்டுக்கான மாதாந்திர சந்தாப் பணத்தைச் செலுத்த ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) 2-ஆவது கணக்கைப் பயன்படுத்த மக்கள் அனுமதிக்கப்படலாம் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
மற்ற நாடுகளிலும் இம்முறை அமுலில் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒருவேளை மலேசியாவிலும் நடைமுறைக்கு வந்தால் 16 மில்லியன் EPF சந்தாதாரர்கள் தங்களின் சொந்த சந்தா பணத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் வாய்ப்பைப் பெறுவர் என்றார்.
நாட்டில் 32 விழுக்காட்டு சுகாதார பராமரிப்புச் செலவுகளுக்கு காப்புறுதி பாதுகாப்புக் கிடையாது. நோயாளிகளே அதனை செலுத்துகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே இந்த EPF 2-ஆவது கணக்கைப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
அப்படியே அமுலுக்கு வந்தாலும், இத்திட்டம் கட்டாயமாக்கப்படாது என்றார்.


