சிப்பாங், ஜூன் 20 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) வழியாக 26 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 30.14 கிலோ போதைப் பொருட்களை கடத்தும் முயற்சியை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு செல்விருந்த நபரின் பயணப்பெட்டி மீது நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 14.4 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 14.65 கிலோ கஞ்சா மொட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து போதைப் பொருளைக் கடத்த முயன்றதற்காக அந்நபர் கைது செய்யப்பட்டதாக கே.எல்.ஐ.ஏ.
சுங்க துறை இயக்குநர் சுல்கிப்லி முகமது தெரிவித்தார்.
கருப்புப் பட்டியல் பதிவு காரணமாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தால் அவரது பயணம் தடுக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பொருள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
உடல் சோதனையின் போது அந்த நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சோதனையில் கஞ்சா மொட்டுகள் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக காற்று உறிஞ்சப்பட்டு சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் அவை நிரம்பியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஓர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த மே 16ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ. சுயேச்சை வர்த்தக மண்டலத்தில் உள்ள ஒரு சரக்கு முனைய நடத்துநர் வழியாக கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 900,000 வெள்ளி மதிப்புள்ள 5.31 கிலோ எக்ஸ்டசியை சுங்கத்துறை கண்டுபிடித்ததாக சுல்கிப்லி மேலும் கூறினார்.
ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்ததாக நம்பப்படும் இந்த போதை மருந்துகள் பேக் செய்யப்பட்டு மடிக்கணினி பாகங்கள் என அறிவிக்கப்பட்டிருந்தன என்றார் அவர்.


