ரவாங், ஜூன் 20 - சீனர்களின் பாரம்பரிய கணிப் பொறியான ABACUS எனும் மணிச்சட்டத்தின் பயன்பாடு குறித்து ஆரம்பப் பள்ளிகளில் தற்போது போதிக்கப்பட்டு வந்தாலும் சீன மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அதில் ஆர்வம் காட்டுவது குறைவாகும்.
அண்மையில் தைவான், மாக்காவில் நடைபெற்ற அனைத்துலக எண் கணிதம் அபக்கஸ்' போட்டியில் கலந்து கொண்ட ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவி டிக்ஷா யோகேஸ் அந்த பிம்பத்தை உடைத்துள்ளார்.
இவர் தமது அபார திறனாற்றலை வெளிப்படுத்தி அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
`2025 Guangdong - Hong Kong - Macau - Taiwan Youth Abacus`` என்ற அப்போட்டிய்ல் 488 மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில், மலேசியாவைப் பிரதிநிதித்து சென்ற ஒரே இந்திய மாணவி டிக்ஷா ஆவார்.
மணிச்சட்டத்தின் பயனையும் அதனை எவ்வாறு கையாண்டு கணிதப் பாடத்தை எளிமையாக பயில்வது என்பதை அறிந்ததும் நான்கு வயது தொடங்கி தன் மகளை மணிச்சட்ட பயிற்சி வகுப்பிற்கு அனுப்பியதாக டிக்ஷாவின் தாயார் ஹேமா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அப்பயிற்சியை சீனர் கற்றுக் கொடுத்ததால் மொழிப் பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக சீன மொழி பயில்வதற்கும் அவருக்கு ஏற்பாடு செய்ததாக ஹேமா கூறினார்.
தமது மகளின் சாதனையில் பெருமை கொள்வதோடு, தொடர்ந்து அவரை அடுத்தகட்ட பயிற்சிக்கு ஊக்குவிக்கும் முயற்சிகளை தாம் மேற்கொள்ளப் போவதாக ஹேமா உறுதியுடன் கூறினார்.
இதனிடையே, இதற்கு முன்னர் தாம் கலந்து கொண்ட சில போட்டிகள் குறித்து மாணவி டிக்ஷா பகிர்ந்து கொண்டார்.
"சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தது. அதேபோல மலேசியாவில் இருமுறை நடைபெற்ற போட்டிகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களைப் பிடித்திருந்தேன். பல பயிற்சிகளுக்கு பின்னர் இம்முறை சீனாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து தங்கப் பதக்கம் வென்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று டிக்ஷா யோகேஸ் தெரிவித்தார்.
அதேவேளையில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ABACUSயை கற்றுக் கொள்வதற்கு மாணவி டிக்ஷா முன்னுதாரணமாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.
பெர்னாமா


