(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 19 - கணவர் விபத்தில் சிக்கி வேலைக்கு செல்ல முடியாத நிலையில் குடும்பச் சுமையை ஏற்றுள்ள ஜென்ஜாரோமை சேர்ந்த குடும்ப மாதுவுக்கு பந்திங் சட்டமன்ற தொகுதி சேவை மையம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கணவர் மாதவன் மீண்டு வரும்வரை குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை நாசி லெமாக் விற்பனை மூலம் ஈட்டுவதற்கு ஏதுவாக மேசை, நாற்காலி, குடை போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வருமானத்திற்கு கணவரை மட்டுமே நம்பியிருந்த தங்களுக்கு விபத்து பேரிடியை ஏற்படுத்திய நிலையில் குடும்பத்தையும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்கு உதவிகோரி குணசுந்தரி தொகுதி சேவை மையத்தை அணுகினார்.
குணசுந்தரியின் நிலையை அறிந்த பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, அவருக்கு வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான உதவிகளை வழங்கும்படி தங்களை பணித்ததாகத் தொகுதி சேவை மையத்தின் நிர்வாகி திருமதி கண்மணி கூறினார்.
அதோடு மட்டுமன்றி, மாநில அரசின் பிங்காஸ் திட்டத்தின் மூலம் குணசுந்தரி குடும்பத்திற்கு மாதம் 300 வெள்ளி கிடைப்பதற்குரிய ஏற்பாட்டையும் தாங்கள் செய்துள்ளதாக அவர் சொன்னார்.
குணசுந்தரி தனது வர்த்தகத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு தொடர்ந்து உதவிகள் வழங்க தொகுதி சேவை மையம் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.


