கோலாலம்பூர், ஜூன் 19 - ஈரான் மீதான இஸ்ரேலின் அண்மைய வான் தாக்குதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவை அனைத்துலகச் சட்டத்தை மீறும் மற்றும் அரசதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் "தண்டனைக்குரிய" மற்றும் "சினமூட்டப்படாத " செயல்கள் அவர் என்று வர்ணித்தார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்கள் தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்வதையும் பிராந்தியத்தில் அமைதித் தீர்வுக்கான நம்பிக்கையைத் தகர்த்தெறிவதையும் நோக்கமாகக் கொண்டவை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
முழுமையாக எந்த தண்டனைக்கும் உட்படாமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துலகச் சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். மேலும் உலகளாவிய ஒழுங்கை ஒன்றாக வைத்திருக்கும் விதிமுறைகளை மேலும் சீரழிக்கிறது.
பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க தீர்க்கமாகச் செயல்படும்
அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் வெளிப்படையாகப் பேச நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்தார்.
இன்று இங்கு நடைபெற்ற 38வது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டில் ஆற்றிய முக்கிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் மீது கவனத்தைத் திருப்பிய அன்வார், இடைவிடாத இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். இது பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய ஒரு சோக நிகழ்வாகும் என்று தெரிவித்தார்.
பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து கவலையை வெளிப்படுத்தக்கூடிய புனிதமான அறிவிப்புகளைத் தாண்டி பிற உதவிகளை அதிகமாகத் தேவைப்படுகின்றன.
மனிதாபிமான சட்டத்தை நிலைநிறுத்தவும் உடனடி போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தவும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு தடையின்றி உதவி வழங்குவதை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த அனைத்துலக நடவடிக்கை அவர்களுக்குத் தேவை என்று அவர் கூறினார்.


