கெய்ரோ, ஜூன் 19 - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான வான்வழிப் போரின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளதால் தங்கள் அவலநிலையை அனைவரும் மறந்துவிட்டதாகக் காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய நாட்களில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 40 பேர் நேற்று இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பலியானவர்கள் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இஸ்ரேல் காஸா மீதான முழுமையான முற்றுகையை பகுதியளவு நீக்கியதிலிருந்து கடந்த மூன்று வாரங்களில் உதவி கோரும் பாலஸ்தீனர்கள் தினசரி கொல்லப்படும் சமீபத்திய சம்பவங்களில் இதுவும் அடங்கும்.
மகாசி அகதிகள் முகாம், ஜெய்டவுன் சுற்றுப்புறம் மற்றும் காஸா நகரில் உள்ள வீடுகள் மீது நடத்திய தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்ட வேளையில் தெற்கு காஸா, கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய காசாவில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட உதவி பொருள் லோரிகளுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மே மாத இறுதியில் உதவி விநியோகம் மீண்டும் தொடங்கியதிலிருந்து உணவு உதவி பெற முயன்றவர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 397 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் காஸா சுகாதார அமைச்சு செவ்வாய் அன்று தெரிவித்தது.


