கோலாலம்பூர், ஜூன் 19 - வங்கிக் கணக்கு ரகசியத்தைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தை மீறியதற்காக National Feedlot Corporation நிறுவனத்தின் (NFCorp) தலைவர் டத்தோ முஹமாட் சாலே இஸ்மாயில் மற்றும் மூன்று துணை நிறுவனங்களுக்கு, 9,000 கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு பப்ளிக் (Public) வங்கி நிறுவனத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மலாயா தலைமை நீதிபதி டான் ஸ்ரீ ஹஸ்னா முஹ்மாட் ஹாஷிம் தலைமையில், சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டான் ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லி மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ அபு பாக்கர் ஜய்ஸ் ஆகியோர் கொண்ட குழு, சமப் பங்கீடு, முன்மாதிரி மற்றும் மோசமான சேதங்களுக்காக தலா 3,000 கோடி ரிங்கிட்டை இழப்பீடாக அறிவித்தனர்.
இழப்பீடு தொகை செலுத்தப்படும் வரையில், தீர்ப்புத் தொகைக்கு ஆண்டுக்கு இரண்டு விழுக்காடு வட்டியை, பப்ளிக் வங்கி செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி டான் ஸ்ரீ ஹஸ்னா உத்தரவிட்டார்.
மேல்முறையீட்டாளர்கள் நிதி அறிக்கைகளையும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளையும், ஒரு நிபுணர் சாட்சி மூலம் சமர்ப்பித்ததாகவும், அதை பப்ளிக் வங்கி எதிர்த்து வாதிடவில்லை என்றும் அவர் தமது தீர்ப்பில் அறிவித்தார்.
பெர்னாமா


