கோலாலம்பூர், ஜூன் 19 - ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அதிகரித்து வரும் பதட்டமான நிலைமையைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மலேசியர்கள் ஜூன் 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் விசா ஏற்பாடுகள் முழுமையடைந்துள்ளன.
அவர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட விவரங்களை வெளியிட முடியாது என ஃபஹ்மி கூறினார். அவர்களில் பெரும்பாலோர் ஜூன் 20ஆம் தேதியன்று மலேசியா புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


